அ.தி.மு.க எங்களது பகையாளிகள் அல்ல, பங்காளிகள் தான்... கூட்டணி வைத்தால் என்ன தவறு? - ஆர்.எஸ்.பாரதி

 
rs bharathi

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:

யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கும், எங்கள் கண்களை திறக்கவும், இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைந்துள்ளது. மிக விரைவில் மாற்றம் வரும். அப்போது, நாங்கள் யார் என்பதை காட்டுவோம். ஒரு கட்சியின் தொண்டர்களின் உழைப்பில் வெற்றி பெற்று விட்டு, 10 நாட்களில் வேறு கூட்டணிக்கு செல்வது கேவலமானது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்கின்றனர். தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி செல்பவர்களும், அந்த முறையை பின்பற்றினால் நல்லது. ம.தி.மு.க., பொதுக்குழுவிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போலவே முடிவு எடுக்க உள்ளனர். இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். விஜய் வெல்வார் என, யாரும் நினைக்கவில்லை. இப்படி ஓர் அதிசயம் நடந்ததால், பலம் மிக்கவர்கள் பலியாகி விட்டனர்.

அ.தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தி.மு.க., பேசவில்லை. அ.தி.மு.க., ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. அ.தி.மு.க.,வுடன் பல முறை கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டு வைத்திருந்தன. த.வெ.க., உடன் சென்றதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, அப்படி சொல்கின்றனர். இப்படி கூட்டணி மாறும் கட்சிகளை, 60 ஆண்டுகளாக நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம். தி.மு.க.,விலிருந்து அ.தி.மு.க., பிரிந்து, 54 ஆண்டுகள் ஆகி விட்டன. அக்கட்சி எங்களுக்கு பகையாளி அல்ல; பங்காளி தான். அதற்காக கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அப்படியே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், அதில் ஒன்றும் தவறு இல்லை.

தி.மு.க., - அ.தி.மு.க.,வை சட்டசபையில் ஒரே வரிசையில் காலம் அமர வைத்துவிட்டது; காலம் கனிந்து விட்டது. இதையெல்லாம் பார்க்கும் தொண்டர்கள், இருவரும் இணைந்து விட்டதாக நினைக்கின்றனர். இந்த இணைப்புக்கு, எங்களுடன் இருந்த கூட்டணி கட்சிகளே காரணம். ஸ்டாலினால் தான் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் வந்துவிட்டனர். இப்போது கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள், தேர்தலுக்கு முன்பே வெளியேறியிருந்தால், கூடுதலான தொகுதிகள் தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கும்.

தி.மு.க., கூட்டணியை உடைப்பதில், த.வெ.க., மட்டுமல்ல, வேறு பெரும் சக்தியும் வேலை செய்து வருகிறது. கூட்டணியிலிருந்து போகிறவர்கள் போகட்டும். இதை எதிர்கொள்வதற்கான வியூகங்களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வகுத்து வருகிறார். தி.மு.க.,விலிருந்து எந்த தலைவரும், தொண்டரும் செல்லவில்லை. கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.