பெண்களின் திருமண வயதை 21 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்..! பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா கோரிக்கை!
தர்மபுரியில் நேற்று பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா அளித்த பேட்டி:
தர்மபுரி சிப்காட்டில் தொடங்கப்படும் நிறுவனங்களில், 75 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூர் நபர்களுக்கு வழங்க வேண்டும். புதிய தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கும், தர்மபுரி மாவட்டத்திற்கும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை, தமிழக முதல்வர் விஜயும், தொழில்துறை அமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், ஒரு சதவீதம் உண்மை இருந்தால் கூட, சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, தண்டனைகள் கடுமையானால் தான், குற்றங்கள் குறையும். மது மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தினாலே, தமிழகத்தில் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.
தர்மபுரி மாவட்டத்தில் இளம் வயது மற்றும் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதால், கிராம புற பெண்களின் உயர்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க பெண்களின் திருமண வயதை, 21 என நிர்ணயம் செய்து, சட்டமாக நிறைவேற்ற வேண்டும். பெண்கள் கல்லுாரி படிப்பிற்கு சென்றாலே, அவர்களின் உயர்கல்வி மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிடும். அனைத்து விதமான வேலைவாய்ப்புகளும் பெற்று முன்னேறுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

