23 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! 'புதிய ஓய்வூதியத் திட்டம்' - முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர்கள் வரவேற்பு..!

 
1 1

தமிழக அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த 23 ஆண்டுகளாகப் பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லாமல் தவித்து வந்த அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளன.


ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டிய நிர்வாகிகள், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்குத் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், "சுமார் இரண்டு தசாப்தங்களாக நிலவி வந்த ஓய்வூதியப் போராட்டத்திற்கு இன்று விடிவு கிடைத்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் கூடிய இந்தத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை" என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.மேலும் ஜனவரி 6-ந்தேதி முதல் நடக்க இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.