தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம் - தவெக, விசிக, சிபிஎம் கண்டனம்..!

 
1

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் ஏற்கனவே பல்கலைக்கழகம் அறிவித்தபடி, 'வந்தே மாதரம்' பாடல் முதலில் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய கீதமும், கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையின் பெயரை கொண்ட பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் பல்கலைக்கழகத்திற்கு கண்டனங்களை தெரிவித்திருந்தன.

இதுதொடர்பாக தவெக ஐ.டி விங்க் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம்.

தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்" என பதவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "இன்று மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன். இவரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல மாணவர்களும் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது.

ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல.அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல், வந்தேமாதரம் மூலம் போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும். இதைத்தான், நேரு காலத்திலிருந்து இப்போதுவரை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருகிறது.

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை. தமிழ்மொழிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மறுத்து சமற்கிருதத்துக்கு ஒதுக்கும் வஞ்சனை. காவிரியிலிருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரையும் திறந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மவுனமே காக்கிறது. இந்த சூழலில், வந்தே மாதரம் மட்டும் திணிப்பது சரியா? தமிழ்நாட்டின் உணர்வுகளை புறக்கணிக்கும் ஆளுனர் மாளிகையின் தமிழர் விரோதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என அதில் தெரவிக்கப்பட்டுள்ளது.