'அதேதான் நானும் சொல்றேன்.. நகைச்சுவையை பகைச்சுவை ஆக்காதீங்க' - துரைமுருகன்
ரஜினியும், தானும் எப்போதுமே நண்பர்களாவே இருப்போம்; எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஒரு பள்ளியில், ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல 'ரேங்க்' வாங்கியவர்கள். ஆனாலும், வகுப்பறையை விட்டுச் செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள். கருணாநிதியுடன் இருந்தவர்களை சிறு வயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு, அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா?
அதுவும், துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னு சொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. அந்தவகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்” என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்த நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என்று கூறினார். இது சர்ச்சையாகி பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ அவர் மிகப்பெரிய தலைவர். அமைச்சர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்.. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. அவருடனான நட்பு எப்போதும் தொடரும்” என்று தெரிவித்தார்.
மீண்டும் ரஜினி கூறியதை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கருத்துக்களை கேட்டனர். அதற்கு, “அதையேத்தான் நானும் சொல்கிறேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று தனது பாணியில் பதிலளித்தார்.