“உண்மையான சமூக நீதிக்கு மீண்டும் வித்திட்ட முதல்வர் விஜய் பாராட்டுக்குரியவர்”- தங்கர் பச்சான்
1980 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்ட கோரிக்கையை 40 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி அதனை இன்று சாதித்திருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் தனது எக்ஸ் தளத்தில், “பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக்காலத்தில் 1931 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமூக நீதி கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு தான் இட ஒதுக்கீடு கொள்கை தமிழ்நாட்டில் இன்று வரை பின்பற்றப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் சமூக நீதி பற்றி பேசியதுடன் சமூக நீதிக்காக போராடிய தலைவர்களின் படங்களை பயன்படுத்திக் கொண்டே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்! ஆனால், தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு ஒரே மாதத்திலேயே இன்று தமிழ்நாடு சட்டமன்ற ஆளுநர் உரையில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்! இதனால் உண்மையான சமூக நீதியை இனிதான் பெறப் போகிறோம்!
1980 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்ட கோரிக்கையை 40 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி அதனை இன்று சாதித்திருக்கிறது! இவ்வாண்டு இறுதிக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் அதன் பிறகு இவ்வாண்டு இறுதிக்குள் தமிழக அரசு சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கும் என அறிவித்துள்ளது. உண்மையான சமூக நீதிக்கு மீண்டும் வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த பாராட்டுக்குரியவர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

