“டங்ஸ்டன் விவகாரத்தில் மூல காரணமே நீங்கதான்... இன்று அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காய நினைக்கிறீர்கள்”- தங்கம் தென்னரசு
கனிம, சுரங்க மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி. தம்பிதுரை, மாநிலங்களவையில் ஆதரித்துப் பேசி, ஆதரித்து வாக்களித்துள்ளதாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரம் இல்லா நேரத்தின் போது டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மதிமும பூமிநாதன், அதிமுக ராஜன் செல்லப்பா, தவாக வேல்முருகன், சிபிஎம் சின்னத்துரை, பாமக அருள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக எம்.பி. தம்பிதுரை கனிமவள சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து பேசினார். இதுதான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்று தெரிவித்தார். தமிழக அரசு தொடக்கம் முதலே இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதிமுக இன்றைக்கு அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காய நினைப்பதாகவும் கூறினார்.
அப்போது பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார், இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக எம்.பி. தம்பிதுரை கனிமவள சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து பேசியுள்ளார். அதை மறுக்கிறீர்களா? பேசவில்லை என நீங்கள் சொன்னால். ஆதாரத்தை நான் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறேன் என்று அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி அளித்தார்.
இறுதியாக பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், நமது முதலமைச்சர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்றும் கூறினார்.