“இரண்டு மாங்காய் அவுட்”- ராமதாஸ், அன்புமணியை விமர்சித்த அமைச்சர்
சின்னமாங்காவும், பெரியமாங்காவும் மேடையிலே அடித்து கொண்டது, இரண்டு மாங்கா அவுட் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குன்றத்தூர் பகுதியில் நகர செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “2026ல் மொத்தமா வா இல்ல... தனியா வா... திமுக தொண்டர்கள் தயாரா இருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் வா... நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம். சீமான் இப்போது ஆளையேக்காணோம். நாட்டில் அவர்தான் யோக்கியன் மற்ற யாரும் யோக்கியன் கிடையாது. சில மாதங்களாக ஆளையே கானோம் யூடியூபில் கூட காணவில்லை. அவரது கதை குளோஸ். திமுகவை விமர்சனம் செய்தாலோ எங்களது வயிற்று எரிச்சலை கொட்டி கொள்கிறார்களோ அவர்கள் விளங்க மாட்டார்கள்.
நேற்று சின்ன மங்காய்யும், பெரிய மாங்காய்யும் மேடையிலே அடித்துக் கொண்டது, இரண்டு மாங்காய் அவுட்டு. நாங்க வயிறு எரிந்தாலே போதும். இன்று ஒருவர் சாட்டியில் அடித்து கொண்டிருக்கிறார். எங்களிடம் கொடுத்து அடிக்க சொன்னால் நாங்கள் அடித்திருப்போம்,நீயே அடித்துக் கொண்டால் எப்படி வலி வரும்?” என பேசினார்.