அம்மாடியோவ்... ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஜவுளி விற்பனை
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஈரோடு ஜவுளி வார சந்தையில் 7 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வார சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஆந்திரா கர்நாடகா கேரளா தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறுகுறி வியாபாரிகள் துணிகளை விற்பனைக்காக கொள்முதல் செய்வார்கள். தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த சில வாரங்களாக ஜவுளி வார சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவில் ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு வந்து துணிகளை கொள்முதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய நடைபெற்ற ஜவுளி வாரச்சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா காந்திஜி சாலை, ஆர் கே வி சாலை, ஸ்டேட் பேங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் கடைகளை அமைத்து விடிய விடிய விற்பனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இன்று மாலை வரை ஜவுளி வார சந்தையில் 7 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் வழக்கமாக ஜவுளி வார சந்தையில் 5 கோடி ரூபாய் அளவிற்கு குறைவாகவே வியாபாரம் நடைபெறும் நிலையில் தீபாவளியை ஒட்டி கூடுதலாக விற்பனை நடைபெற்றிருப்பது வியாபாரிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சிறுகுறு வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஜவுளி வார சந்தையில் ஜவுளி ரகங்களை வாங்கிச் சென்றனரர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் சனிக்கிழமை அன்று கூடுதலாக வாரச்சந்தை நடைபெறும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.


