கலைஞர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்தோர்க்கு குறுஞ்செய்தி!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோர்க்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும். வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12.000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65.21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு |செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ. 1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தை மரக்காணத்தில் தமிழக முதலமைச்சர் 10ம் தேதி துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.