ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

 
போராட்டம்

சென்னை அன்பழகன் வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் அமைச்சர் பொன்முடி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை  57 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள்  5ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படவில்லை, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி நடத்தக்கூடாது என்பதே என்பதே இவர்களின் முக்கிய குற்றச்சாட்டு. 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர், “எங்களது கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஒரு வார காலத்தில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. இதனால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறோம்” என்றார்