சிவகங்கையில் பயங்கரம்..!! தவெக உறுப்பினர் வெட்டிக் கொலை..!

 
1
சிவகங்கை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் நவீன் (24). இவர் தவெக உறுப்பினராக இருந்து வந்தார். நேற்று நவீன், தனது நண்பர்களுடன் சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்குசென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் வெளியே வந்த போது, மர்ம நபர்கள் சிலர் அரிவாளுடன் நவீனைத் தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நவீன் ஓடியபோதும், அந்த கும்பல் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் காவல்துறையினர், நவீனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, உடலில் அசைவு இருந்ததாகக் கூறி நவீனின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அவருக்கு இன்னும் உயிர் இருப்பதாகக் கூறி, பிரேத பரிசோதனையை நிறுத்த வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம், "நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு வந்து பரிசோதித்த போதும் அவர் உயிரிழந்தது உறுதியானது. அதன்பின்னர் பிரேத பரிசோதனை அறைக்கு உடலை எடுத்துச் செல்லும் போது, அங்குள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் ஏற்பட்ட உடல் அசைவை (Jerk) கவனித்து, உறவினர்கள் உயிர் இருப்பதாக தவறாகக் கருதிவிட்டனர். மீண்டும் பரிசோதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியதை அறிந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) குழந்தை ராணி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு குழந்தை ராணி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் தவெக நிர்வாகி நவீன் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தப்பியோடிய மேலும் சிலருக்கு காவல் துறையினர் வலை வீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுளளது.