ஈரோட்டில் பயங்கரம்..!! நடுரோட்டில் பெண் குத்திக்கொலை..!

 
Q Q
பெருந்துறையை அடுத்த தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்த 60 வயதான செங்கோட்டையன் என்பவருக்கும், கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்த 52 வயதான விஜயா என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எனினும், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பின்னர் விஜயா பெருந்துறை கொங்கு நகரில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே செங்கோட்டையன் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் செங்கோட்டையன் தனக்கு சொந்தமான சொத்தை விற்க முயன்றுள்ளார். அந்த சொத்தை வாங்க முன்வந்தவர்கள், முதல் மனைவி விஜயாவிடம் இருந்து ஒப்புதல் கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் தனது உறவினர்கள் மூலம் விஜயாவை தொடர்பு கொண்டு, தனது சொத்தை விற்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதை ஏற்காத விஜயா, தனது ஒப்புதல் வேண்டுமென்றால் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செங்கோட்டையன் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் விஜயா கேட்ட தொகை அதிகமாக இருப்பதாக கூறி அதை தன்னால் தர முடியாது என்று செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
கேட்ட தொகை தனக்கு வந்தால் மட்டுமே சொத்து விற்பனைக்கு கையெழுத்து போடுவேன் என்று, விஜயா உறுதியாக கூறி உள்ளார். இதனால் விஜயா மீது செங்கோட்டையன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மதியம் பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோடு வள்ளலார் வீதி அருகே விஜயா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செங்கோட்டையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான செங்கோட்டையனை வலைவீசி தேடி வருகின்றனர்.