சென்னையில் பயங்கரம்..! தனியாக இருந்த மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை..!
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் கைகளை கட்டிப் போட்டு, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகள் மூதாட்டியை தீர்த்து கட்டியதோடு மட்டுமில்லாமல், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். கொலைக்கு பின்னணியில் முழுமையாகக் கொள்ளை நோக்கம் இருப்பதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த அம்பத்தூர் காவல் துறையினர், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஆட்டோவில் வந்து கொடூர செயலில் ஈடுபட்ட அந்த இரண்டு மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதியோர்கள் தனியாக வசிக்கும் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் காவல் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

