சென்னையில் பயங்கரம்..! பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை..!
புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், சென்னை அசோக் நகரில் பெண் ஒருவருடன் காரில் அமர்ந்து பேசியுள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரகாஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.இதில் படுகாயமடைந்த பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரகாஷ். 38 வயதான இவர் சொந்தமாக தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. அவ்வப்போது தொழில் விஷயமாக சென்னைக்கு வருவதை இவர் வழக்கமாக வைத்திருந்துள்ளார். தொழில் ரீதியான சந்திப்புகளை முடித்த பிறகு, காபி குடிப்பதற்காக அசோக் நகர் காவல் நிலையம் அருகே உள்ள காபிக் கடைக்கு அருகே காரை நிறுத்திவிட்டு, பிரகாஷும் அவரது பெண் தோழியும் காருக்குள் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக 4 பேர் கொண்ட கும்பல் பிரகாஷின் கார் அருகே பைக்குகளை நிறுத்திவிட்டு, காருக்குள் உட்கார்ந்திருந்த அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். பின், பிரகாஷ் காரை விட்டு இறங்கி வந்து அவர்களுடன் பேசியுள்ளார்.
அப்போது அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு பிரகாஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதே நேரத்தில் அவருடன் இருந்த பெண் தோழியும் மாயமாகியுள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரகாஷ் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடனடியாக பிரகாஷை மீட்டு அருகில் இருந்த இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


