கோழிக்கோடு சுங்கச்சாவடியில் பயங்கரம்..! கார் பானட்டில் இழுத்து செல்லப்பட்ட டோல்கேட் ஊழியர்..!
கோழிக்கோடு அருகே உள்ள பந்தீரங்காவு சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க முன்னால் சென்ற ஒரு காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் வேகமாக சென்றது.
பின்னால் சென்ற கார் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்பதை அறிந்த டோல்கேட் ஊழியர் மேத்தல் ஜிதேஷி, குறுக்கே புகுந்து காரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதால், ஜிதேஷி காரின் பானட்டில் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து, சுங்கச்சாவடியில் பணிபுரியும் சக ஊழியர்கள் வேகமாக பின்தொடர்ந்து ஓடிச்சென்று காரை தடுத்து நிறுத்தினர். அப்போது, காரில் வந்தவர்களுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கி வந்த ஓட்டுநர், தங்கள் காரின் பானட்டை சேதப்படுத்த முயன்றதாகக் கூறி, ஜிதேஷியை மீண்டும் தாக்கினார்.
இதையடுத்து, காரில் வந்தவர்கள் தங்கள் கார் சேதப்படுத்தப்பட்டதாக பந்தீரங்காவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல், தங்களது ஊழியரை வேண்டுமென்றே தாக்கி காயப்படுதியதாக சுங்கச்சாவடி நிர்வாகமும் புகார் அளித்துள்ளது. இரண்டு புகார்களின் மீதும் விசாரணை நடத்தி, உண்மைத்தன்மையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, காயமடைந்த டோல்கேட் ஊழியர் ஜிதேஷி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#WATCH | கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற கார்...தடுத்த ஊழியரை பேனட்டில் வைத்து 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற கார் ஓட்டுநரால் பரபரப்பு#keralam #tollgate #cctv #News18TamilNadu pic.twitter.com/Szo5HqsRYW
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 28, 2026

