தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆசூர் பகுதியில் இயங்கி வரும் தார் தொழிற்சாலையில் இன்று யங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் கிராம மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்திரமேரூர் அடுத்த நெமிலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரால் இந்த தார் தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சாலைகள் அமைக்கப் பயன்படும் தார் மற்றும் ஜல்லி கற்கள் ஒன்றாகக் கலந்து வெப்பம் காட்டப்பட்டு அவை விநியோகிக்கப்படுகின்றன. வழக்கம் போல் இன்றும் தார் உருக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அதிக வெப்பம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தார் கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் ஆசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் சிரமப்பட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்த உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும், தார் என்பதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் நீடிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


