விழுப்புரம் அருகே பயங்கர விபத்து- லயோலா கல்லூரி மாணவன் பலி
விழுப்புரம் அருகே விழிப்புணர்வு நாடகம் போட சரக்கு வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனத்தில் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் 69 மாணவ மாணவிகள், இப்பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு செய்வதற்காக வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று மாலை ஆலம்பாடி தொண்டு நிறுவனத்திலிருந்து வடகரைதாழனூர் கிராமத்தில் விழிப்புணர்வு நாடகம் போடுவதற்கு, இரண்டு டாட்டா ஏசி வாகனத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர்.
ஒரு டாட்டா ஏசியில் ஆண்களும் ஒரு டாட்டா ஏசி பெண்களும் பயணம் மேற்கொண்ட போது டாட்டா ஏசி வாகனம் கடகனூர் அருகே உள்ள வளைவு சாலையில் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த கட்டையில் மோதி கவிழ்ந்து ஒரு டாட்டா ஏசி வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கல்லூரி மாணவன் சாமுவேல் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், வாகனத்தில் பயணித்த 20 மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் டாட்டா ஏசி வாகனம் ஓட்டி வந்த சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் (வயது 23) என்பவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


