கோவை-சேலம் சாலையில் பரபரப்பு..! சி.என்.ஜி ஏற்றி வந்த லாரியிலிருந்து திடீர் கேஸ் கசிவு..!

 
11

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,  சி.என்.ஜி ஏற்றி வந்த லாரியிலிருந்து திடீரென  கேஸ் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சி.என்.ஜி (CNG) கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த சிலிண்டர்களில் ஒன்றிலிருந்து திடீரென கேஸ் கசியத் தொடங்கியது.நடுரோட்டில் அதிகளவில் எரிவாயு கசிந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள், ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.

விபத்து அபாயம் காரணமாக லாரியின் அருகில் செல்ல பயந்து, பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியே கடும் பதற்றத்துடன் காணப்பட்டது.அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்படும் முன், அந்த கேஸ் கசிவை ஓட்டுநர் சரி செய்து அங்கிருந்து பத்திரமாக லாரியை ஓட்டி சென்றார்.