தமிழகத்தில் பரபரப்பு..! இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நேற்று (அக்.19) மாலை 05.40 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்படத் தயாராகவிருந்தது.
விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என்றும் சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட விமானம் புறப்படுவதற்கான அனுமதியானது உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன், இண்டிகோ விமானம் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களையும் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். அத்துடன், பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் அமர வைக்கப்பட்டனர். அதேபோல், விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளும், சரக்குப் பார்சல்களும் வெளியேற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்புப் படையினர், அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் விமானத்தின் வெளிப்பகுதி, உட்பகுதி, பயணிகளின் உடைமைகள், சரக்குப் பார்சல்கள் வைக்கப்படும் கேபின்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது. மேலும், இதுபோலி வெடிகுண்டு மிரட்டல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விமானம் நான்கு மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு இரவு 10.00 மணிக்கு கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை விமான நிலைய காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தது யார்? எந்த இடத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

