தென்காசி பேருந்து விபத்து - உயிரிழப்பு 8 ஆக உயர்வு
தென்காசி இடைக்கால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் இடைக்கால் பகுதியில் இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியது. இதில் தென்காசி புதுக்குடி 4வது தெருவை சேர்ந்த வனராஜ் வயது 67,கடையநல்லூர் புளியமுக்கு தெருவை சேர்ந்தவர் தேன்மொழி வயது 55.புளியங்குடியைச் சேர்ந்தவர் மல்லிகா வயது 55,சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கற்பகவல்லி வயது 32 உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 60-க்கும் மேலான பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனை, கடையநல்லூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அப்பொழுது கொண்டு வரும் வழியிலேயே ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கிறார். அவரது விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் 7 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது தென்காசியை சேர்ந்த சண்முகத்தாய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த வகையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மீதமுள்ளவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் விபத்தில் சிக்கிய சம்பந்தப்பட்ட 2 தனியார் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் இடைக்கால் பகுதியில் நடந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
.....

