#JUSTIN 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க டெண்டர்!
சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்ட வழிதடத்திற்காக, 28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில், முதற்கட்டமாக 54.1 கிலோமீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. பயன்பாட்டில் உள்ள இந்த இரண்டு வழித்தடத்திற்காக மொத்தம் 4 பெட்டிகள் கொண்ட 52 ரயில்கள் கையிருப்பில் உள்ளது. இதில் தினசரி 45 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான நீல வழித்தடத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் எனவும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோயம்பேடு வழியாக செல்லும் பச்சை வழித்தடத்தில் ஆறு நிமிடத்திற்கு ஒரு ரயில் எனவும் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் தொடக்கத்தில் பயணிகளின் வரத்து குறைவாக இருந்த நிலையில், தற்பொழுது அசுர வளர்ச்சியில் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர்.
நான்கு பெட்டிகளை கொண்ட 45 ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லாத சூழல் ஏற்பட்டு கூடுதல் பெட்டிகள் அல்லது ரயில்களை இயக்க கடந்த சில ஆண்டுகளாக பயணிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. முதலில் ஏற்கனவே உள்ள ரயில்களில் இரண்டு பெட்டிகளை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனைகளும் நடைபெற்று வந்தது ஆனால் தற்பொழுது புதிதாக 28 ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை உருவாக்க 2,036 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 168 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை முழுவதும் தயாரித்து முடிக்க இரண்டரை காலம் ஆகும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 28 ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிமிடத்தை காட்டிலும் குறைந்த நேரத்தில் அதிக ரயில்களை இயக்க முடியும் என உறுதியளிக்கின்றனர் மெட்ரோ அதிகாரிகள்.

