#BREAKING டெண்டர் முறைகேடு- தாம்பரம் ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
அறப்போர் இயக்கம் வெளியிட்ட ஊழல் புகாரில் சிக்கிய தாம்பரம் மாநகர ஆணையர் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே அசோகா தூண் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், அந்த சிலையை நிறுவுதல், சுற்றுப்புறத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ம் தேதிதான் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற்ற பிறகே அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான டெண்டர் மதிப்பு ரூ.27.30 லட்சம் எனவும் அறப்போர் இயக்கம் கூறியிருந்தது.
இந்நிலையில் அறப்போர் இயக்கம் வெளியிட்ட ஊழல் புகாரில் சிக்கிய தாம்பரம் மாநகர ஆணையர் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

