புதிய பேருந்துகளை வாங்க வெளியான டெண்டர் ரத்து
திமுக ஆட்சியில் சென்னைக்கு புதிதாக 1000 AC மின்சார பேருந்துகளை வாங்க வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) விட்டிருந்த 1000 ஏசி 12 மீட்டர் குறைதள மின்சார பேருந்துகளுக்கான மெகா டெண்டர் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர் கடந்த மார்ச் 6-ம் தேதி விடப்பட்டது. முதலில் ஏப்ரல் 7 தேதி திறக்க வேண்டிய டெண்டர், 11 முறை தேதி நீட்டிக்கப்பட்டு 189 நாட்கள் தள்ளிப்போய் அக் 13 வரை வந்தது. MTC தரப்பு தகவலின்படி, GCC மாடலில் இயக்க ஒரு கி.மீ-க்கு ரூ.77 முதல் 81 வரை கொடுக்கப்பட்ட நிலையிலும், பல நிறுவனங்கள் முன்வரவில்லை. ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே வந்ததால் பல முறை தள்ளிவைக்கப்பட்டது. கடைசியில் வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சங்கங்கள் இதை "மறைமுக தனியார்மயம்" என்று எதிர்ப்பதும், தனியார் ஓட்டுநர்களை வைத்து இயக்குவது என்ற GCC மாடல் மீதான சர்ச்சையும் காரணமாக சொல்லப்படுகிறது.
MTC-க்கு ஏற்கனவே 1000 பஸ்கள் கூடுதலாக தேவை. இப்போது 383 பழைய பஸ்கள் வெற்றிப் பயணம் திட்டத்திற்காக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளதால், சென்னையில் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாகும். சென்னையில் ஓட தகுதியில்லை என்று கழிக்கப்பட்ட 10 லட்சம் கி.மீ ஓடிய பழைய பஸ்கள் தான் இன்னும் சில வருடம் ஓடும் நிலை உள்ளது. டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் 12 மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு முதல்/கடைசி மைல் இணைப்பு தர வேண்டிய 220 மைக்ரோ பஸ் திட்டமும் இதே போல் தள்ளிப்போயுள்ளது. தற்போது 625 மின்சார பஸ்கள் மட்டுமே உள்ளன. 1000 புதிய ஏசி பஸ்கள் வந்தால் தான் சென்னையின் பல ரூட்டுகளில் ஏசி வசதி கிடைக்கும். அது இனி குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடம் தள்ளிப்போகும்.

