தபால் மூலம் கோயில் பிரசாதங்கள் பெறலாம்.. ‘திருக்கோயில்’ செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் சேகர் பாபு..

 
sekar babu

கோயில் பிரசாதங்களை தபால் மூலம் அனுப்பும் திட்டம் மற்றும்  கோயில்களின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் ‘திருக்கோயில்’ என்னும்  செயலியையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.  

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு உள்ளிட்ட பன்முக தகவல்களின் பெட்டகங்களாக திகழும் திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் அவற்றின் சேவைகளை, நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் "திருக்கோயில்" என்ற செயலியை இந்து சமய அறநிலையத்துறை  வடிவமைத்துள்ளது. இதன்மூலம்  கோயில்கள் குறித்த தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், ஆகியவற்றுடன் அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலியும் திருவிழாக்களின் நேரலை போன்றவற்றை  இந்த செயலி மூலம் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.

தபால் மூலம் கோயில் பிரசாதங்கள் பெறலாம்.. ‘திருக்கோயில்’ செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் சேகர் பாபு..

மேலும் திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுல் வழிகாட்டி, வழித்தடம், பக்தர்களுக்கான தங்கும் வசதி, சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, குளியல் அறை, பொருட்கள் வைப்பறை , தொலைபேசி எண்,  கட்டணமற்ற சேவைகள் போன்றவற்றையும் இந்த "திருக்கோயில்" செயலியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.. அன்னதானம்,  திருப்பணி உள்ளிட்ட  எந்தவகை  நன்கொடைக்கும் இந்த செயலி மூலம் கொடை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  பக்தர்களின் வசதிக்காக, தபால் துறையுடன் இணைந்து   திருக்கோயில் பிரசாதங்களை தபால்   மூலம் அனுப்பும் திட்டத்தையும் அமைச்சர் சேகர்பாபு அறிமுகப்படுத்தினார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணைரகத்திலிருந்து இத்திட்டங்களை அவர் தொடக்கி  வைத்தார்.

திருக்கோவில் பிரசாதங்களை அஞ்சல் மூலம் வழங்கும் திட்டமானது, முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளன. மைலாப்பூர் கபாலீஸ்வரர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி, சமயபுரம் மாரியம்மன், பழனி முருகன், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட 48 கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

தபால் மூலம் கோயில் பிரசாதங்கள் பெறலாம்.. ‘திருக்கோயில்’ செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் சேகர் பாபு..

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ இந்தியாவில் எங்கிருந்தும் கோவில் பிரசாதங்களை தபால் சேவை மூலம் பெற்று கொள்ளலாம். இன்னும் மூன்று மாதத்தில் உலகில் எந்த நாட்டில் இருந்தும் திருக்கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். சிதம்பரம் நடராஜர் கோவிலின் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக கூறிய சேகர்பாபு, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்போம். அறங்காவலர் நியமனம் குறித்த இந்து சமய அறநிலையத்துறையில் செயல்பாடு குறித்து  உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் முதல் கட்டமாக 48 முதல் நிலை கோயில்களில் நடைபாதை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.” என்று  குறிப்பிட்டார்.