கோவில் பதாகை ஏரி நிரம்பியது- ஆவடி- செங்குன்றம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
சென்னை அடுத்த ஆவடி கோவில் பதாகை ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால் ஆவடி - செங்குன்றம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆவடி அடுத்த கோவில் பதாகை ஏரி 570 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.இந்த நிலையில் ஆவடி அடுத்த கோவில்பதாகை ஏரி முழு கொள்ளளவை எட்டியது. களங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் கன்னடபாளையம், கணபதி அவன்யூ,கோவில் பதாகை பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கோவில் பதாகை பிரதான சாலையில் வெளியேறும் தண்ணீர், மங்களம் நகர் தரைப்பாலம் வடிகால் வழியாக குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால், மங்களம் நகர்,டிரினிட்டி அவென்யூ,எம்.சி.பி நகர், கிருஷ்ணா அவென்யூ,கிறிஸ்து காலனி,செக்ரட்டரி காலனியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஏரி உபரி நீர் பெருக்கெடுத்து ஆவடி- செங்குன்றம் சாலையில் பெருக்கெடுத்து செல்வதால் சாலை போக்குவரத்து துண்டிக்க பட்டுள்ளது. இதனால் வெள்ளானூர், மோரை, கண்ணியம்மன் நகர், அரக்கம்பாக்கம், கண்ணடபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி சொந்த கிராமங்களுக்கு செல்லும் சூழல் உருவாகி உள்ளது. சாலை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க தடுப்புகளை அமைத்து போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். அதனையும் மீறி இருசக்கர சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட நபர், வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் நிலை தடுமாறி நீரில் மூழ்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள்
தண்ணீரில் சிக்கி பழுது ஏற்பட்டு பாதி வழியில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.


