பிரபல தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மனைவி காலமானார்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோட்டா சீனிவாச ராவ். 70களின் இறுதியில் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 80 மற்றும் 90களில் மிகப்பெரிய குணசித்திரம் மற்றும் வில்லன் நடிகராக உருவெடுத்தார்.
தமிழில் சாமி படத்துக்கு முன்பே ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் சாமி படம் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இவருடைய கர்ஜிக்கும் தோற்றமும் உடல் மொழியும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவரை பெரிதும் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து சிம்புவுடன் குத்து, விஜய்யின் திருப்பாச்சி, ஜீவாவின் கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
கோட்டா சீனிவாச ராவின் மனைவி பெயர் ருக்மணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் மகன் கோட்டா பிரசாத் சாலை விபத்தில் 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மகனின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் கோட்டா சீனிவாச ராவ், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி இருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பக்கபலமாக இருந்தது இவருடைய மனைவி ருக்மணிதான்.ருக்மிணி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரது கணவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார். இதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். கணவர் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மனைவி ருக்மிணி திங்கட்கிழமை மதியம் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். ஒரு மாதத்திற்குள் கோட்டா தம்பதியினர் மரணமடைந்தது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

