ஆன்லைனில் வீடியோ பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற சிறார்கள்! – கையும் களவுமாகப் பிடித்த காவல்துறை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளை வளாகத்தில் ஏடிஎம் மையமும் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், முகமூடி அணிந்தபடி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்த அவர்கள், அதன் செயல்பாட்டை முடக்க முயன்றுள்ளனர்.
பின்னர், தாங்கள் கொண்டு வந்த கூர்மையான கருவிகளை பயன்படுத்தி, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பதை அறிந்த மூன்று பேரும், கொள்ளை முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அடுத்த நாள், ஏடிஎம் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை அறிந்த வங்கி மேலாளர், இதுதொடர்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாடி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (20) மற்றும் இரண்டு சிறார்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், யூடியூப் வீடியோக்களை பார்த்து ஏடிஎம் கொள்ளையில் அவர்கள் ஈடுபட முயன்றிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பு, வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டார்களா என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

