எம்.பி. மகன் ஓட்டிய கார் மோதி இளம்பெண் பலி - அதிர்ச்சி சம்பவம்..!!
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில், ‘இன்ஆர்பிட் மால்’ அருகே நேற்று முன்தினம் இளம்பெண்கள் இருவர் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார் மோதியதில் ஒரு பெண், தலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விபத்தில் உயிரிழந்த பெண், ஒடிஷாவைச் சேர்ந்த பாரதி என்பது தெரியவந்தது. இவர், அங்குள்ள மாலில் இயங்கும் துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் நிகழ்ந்தபோது தன் தோழியுடன் உணவருந்தி விட்டு மீண்டும் பணிக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது, இந்த விபத்து நேர்ந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
விபத்திற்கு காரணமான சொகுசு காரை ஓட்டிய ஜனசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ரமேஷின் மகன் சஞ்சுஷ், 21, என்பவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும், விபத்தை ஏற்படுத்திய 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சுஷ், மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பதை கண்டறிய, அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு அனுப்பப்பட்டுள்ளது.
‘முடிவுகள் வந்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

