இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு

 
ஆசிட்

பவானியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது ரசாயன அமிலம் வீசிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம், 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று  மதியம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து, தன் மீது ஆசிட் வீசப்பட்டதாகவும் தனக்கு சிகிச்சை அளிக்குமாறும் கூறியுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் பார்த்தபோது தலை மற்றும் உடலில் ரசாயன அமிலம் காணப்பட்டுள்ளதோடு, கருகியும் காணப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் ஈரோடு தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவப் பரிசோதனையில் வீசப்பட்டது ரசாயன அமிலம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. திருமணமாகாத கார்த்திக்கும், மீனாட்சி திருமண மண்டப வீதியில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினரான மீனாதேவி (27) என்ற திருமணமான பெண்ணுக்கும், திருமணத்தைத் மீறிய முறையற்ற உறவு இருந்துள்ளது. அதேவேளையில், கார்த்திக் வேறொரு பெண்ணையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மீனாதேவிக்கு தெரிய வந்ததை அடுத்து இன்று மதியம் மீனா தேவியின் வீட்டுக்கு வந்த கார்த்திக்கிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்படவே ரசாயன அமிலத்தை கார்த்திக் மேல் மீனாதேவி ஊற்றியது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.