சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு!
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையிலேயே அவசர அவசரமாக தரையிரக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு 148 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அந்தமான் புறப்பட்டு செல்ல இருந்தது. இந்த நிலையில், விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறை விமானி உடனடியாக கண்டறிந்ததால், ஓடுபாதையிலேயே அவசரமாக விமானம் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டனர். பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அதே விமானத்திலோ அல்லது வேறு விமானத்திலோ பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.