கலாஷேத்ரா மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம்
கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரத்தில், மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்புக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய நபரை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்த கலாஷேத்ரா நிறுவனம், சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் குற்றம் சாட்டப்பட்ட நபரை அழைத்துள்ளது என்றும் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அதை மீறி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தற்போது கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கை மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனைகள் அளிக்கும்படி இரு தரப்புக்கும் அறிவுறுத்திய நீதிபதி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.