Beef சாப்பிடுவியா? சாதியை சொல்லி திட்டியதால் மாணவன் தற்கொலை - ஆசிரியர் கைது
கோவை பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் அகிலன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரால் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் அகிலன் என்ற பள்ளி மாணவன் தற்கொலை சம்பவத்தில், அகிலனை சாதி ரீதியாக மாணவர்கள் ஒடுக்கியதே காரணம் என புகார் எழுந்துள்ளது. பள்ளி ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்? என கேட்டதற்கு அகிலன் உள்ளிட்ட 4 மாணவர்கள் எழுந்து நின்ற நிலையில் சக மாணவர்களால் சாதிய ஒடுக்குமுறை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறை குறித்து புகாரளித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவன் அகிலன் தற்கொலை வழக்கில் ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார் பள்ளி வகுப்பறையில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என ஆசிரியர் விஜயகுமார் கேட்டதைத் தொடர்ந்து 2 மாணவர்கள் சாதிப்பெயர் சொல்லி அகிலனை திட்டியுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், "கோவை பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் அகிலன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரால் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சமத்துவத்தைப் பயிற்றுவிக்கும் கல்விக் கூடங்களில் சாதிய வன்கொடுமை தலை தூக்கி ஆடுவதை இதுபோன்ற சம்பவங்கள் பிரதிபலிக்கிறது. மாணவர் அகிலன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. பிறப்பால் ஒருவரை உயர்வு, தாழ்வாகக் கருதுவது தீண்டாமையின் உச்சம். அதுவும் கல்விக் கூடங்களில் தீண்டாமையும், சாதி வன்கொடுமையும் நுழைந்திருப்பது மாணவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களையே விதைக்கும் செயலாகும்.
சமீப காலங்களாக கல்விக் கூடங்களில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்ற செய்திகளும், மாணவர்கள் ஆசிரியர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வரும் வேளையில் தற்போது சாதி ரீதியிலான குற்றங்களும் உள்ளே நுழைந்திருப்பது மாணவர் சமுதாயத்திற்கே ஆபத்து. கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மேலும் தீண்டாமையை அகற்றி, கல்வியிலும், தேச நலனிலும் அக்கறை கொள்ளும் பயிற்சிகளிலும் அவர்களை இன்னும் ஈடுபடுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கி உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை நன்னெறி கல்விக்கும் தனியாகப் பாடவேளைகளை ஒதுக்கி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

