13 ஆண்டுகால முன்பகை- ஆசிரியரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய இளைஞர்! பகீர் பின்னணி

 
Murder

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் அருண்பாண்டியன் என்கிற ஆறுமுகம்(28). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கைது செய்யப்பட்ட சதீஷ்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரும் அண்ணாமலைநகர் திடல்வெளி பகுதியைச் சேர்ந்த செந்தில்(44) என்பவரும் திடல்வெளி பகுதியில் வேறு சிலருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திடல்வெளி பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் மகன் சதீஷ்குமார்(28) என்பவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் அருண்பாண்டியன் கழுத்தை  சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற செந்தில் என்பவருக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாவைநகர் போலீசார் அருண்பாண்டியன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை வேலு அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி சதீஷ்குமார் அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானம் அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் அவரை பிடிப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடும் நோக்கத்தில் சதீஷ்குமார் கட்டிடத்தின் அருகில் இருந்த சுவர் மீது ஏறி கீழே குதித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. 

கொலை செய்யப்பட்ட அருண் பாண்டியன்

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, கொலை செய்யப்பட்ட அருண்பாண்டியனும், அவரை கொலை செய்த சதீஷ்குமாரும் ஒரே வயது உடையவர்கள். பொறியியல் பட்டதாரியான சதீஷ்குமார் சென்னை சோழிங்கநல்லூரில் வாடகைக்கு அறை எடுத்து ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக 3 மாத பட்டய படிப்பையும் படித்து வந்தார். திருமணம் ஆகாத இவர் தற்போது பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

கொலையான அருண்பாண்டியனும் சதீஷ்குமார் அண்ணாமலைநகரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு பள்ளியில் படித்தபோது அருண்பாண்டியனுக்கும், சதீஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக் கொண்டுள்ளனர். பள்ளியில் பிரேயர் நடக்கும்போதே அவ்வப்போது இருவரும் மோதிக் கொள்வார்கள். இதனால் அடிக்கடி இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி அருண்பாண்டியன் வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரும் அவரது தந்தை சம்பந்தம் மற்றும் உறவினர்கள் சிலரும், அருண்பாண்டியன் குடும்பத்தினரிடம் பள்ளியில் நடந்த தகராறு குறித்து நியாயம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அருண்பாண்டியன் சதீஷ்குமாரை கத்தியால் வலது பக்க கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அவரது காலுக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் நடக்க முடியாமல் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

Murder

பின்னர் சென்னைக்கு சிகிச்சைக்காக சென்று, அதிக அளவில் பணம் செலவு செய்து ஒரு வருடத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க துவங்கினார். இதுதொடர்பாக அப்போதே அண்ணாமலைநகர் போலீசார் இரு தரப்பினர் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நியாயம் கேட்க சென்ற தன்னை கத்தியால் வெட்டியது மட்டுமல்லாமல், அதனால் ஏற்பட்ட வலியும் வேதனையும் பொருட்செலவும் சேர்ந்து அருண்பாண்டியன் மீது சதீஷ்குமாருக்கு கோபத்தை அதிகரித்தது. இதை மனதில் வைத்து அருண்பாண்டினால்தான் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பதை நினைத்து அவரை பழிதீர்க்க சதீஷ்குமார் காத்திருந்தார். இதற்காக சில ஒரு சில முறை அருண்பாண்டியனை சதீஷ்குமார் நோட்டமும் விட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று இரவு சீட்டு விளையாட திடல்வெளி பகுதிக்கு வந்த அருண்பாண்டினை சதீஷ்குமார் அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளார். அப்போது அருண்பாண்டியன் தம்பி மதன்குமார் தடுக்க வந்துள்ளார். ஆனால் அவரைப் பார்த்து சதீஷ்குமார் கத்தியை காட்ட அவர் பயந்து ஓடி விட்டார். அருண்பாண்டியனை வெட்டிக்  கொலை செய்து பழி தீர்த்த உடன் சதீஷ்குமார் அங்கிருந்து நடந்தே சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்து பின்னர் அதிகாலை நேரத்தில் பஸ் ஏறி கடலூருக்கு சென்றுள்ளார். அருண்பாண்டியனை வெட்டிக்கொலை செய்யும்போது  சதீஷ்குமாரின் தலையிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக கடலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் சிதம்பரம் வந்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் சரண்டர் ஆவதற்காக பணம் ஏற்பாடு செய்ய வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். இந்த தகவலை அவர் போலீசாரிடம் வாக்கு மூலமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த அண்ணாமலைநகர் போலீசார் அவரை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.