வேலியே பயிரை மேய்வது போல +2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!
2025–26 கல்வியாண்டில் பள்ளியில் பயின்ற சில 12 ஆம் வகுப்பு மாணவிகள், ஆசிரியர் தங்களுக்கு நேரிலும், தொலைப்பேசி வாயிலாகவும் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக குற்றம்சாட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசிய புகார் மனு அளித்தனர்.
இதற்கிடையே, மாணவிகளின் புகார் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
அந்த விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாணவிகள் ஏற்கனவே பள்ளி முதல்வரிடம் புகார் அளித்திருந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகம் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
பின்னர் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர், விடுதி வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர் மீது மாணவிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, இந்த வழக்கில் மற்ற மூன்று நபர்களின் பங்கு என்ன? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், புகார் அளித்த மாணவிகளிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும், மாணவிகளுக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைப்பேசி தொடர்புகள் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

