கலைத்திருவிழாவுக்கு அழைத்து வந்த மாணவியிடம் அத்துமீறல்- ஆசிரியர் கைது
விருதுநகரில் நடந்த கலைத்திருவிழாவில் பங்கேற்க 17 வயது மாணவியை அழைத்து வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அருப்புக்கோட்டையை சேர்ந்த கணித ஆசிரியர் ராஜாமணியை (50) விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். இவர் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார்.
இவரையும், அதே போட்டியில் வெற்றி பெற்ற மற்றொரு 14 வயது மாணவியையும் விருதுநகரில் நவ. 16ல் நடந்த மாவட்ட போட்டியில் பங்கேற்க அருப்புக்கோட்டையை சேர்ந்த கணித ஆசிரியர் ராஜாமணி காரில் அழைத்து வந்துள்ளார். இந்த இரு சிறுமிகளுக்கும் வெவ்வேறு பள்ளிகளில் போட்டி நடந்ததால், 14 வயது மாணவியை முதலில் போட்டி நடக்கும் பள்ளியில் இறக்கி விட்டார். பின் 17 வயது மாணவியை அவருக்கான போட்டி நடக்கும் பள்ளியில் இறக்கி விட காரில் அழைத்து சென்றார்.
போட்டி முடிந்ததும் மதியம் கார் நிறுத்திய இடத்திற்கு 17 வயது மாணவியை அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அச்சமடைந்த மாணவி யாரிடமும் கூறவில்லை. ஆனால் போட்டியில் வெற்றி பெற்ற உடன் வந்த 14 வயது மாணவியை ஈரோட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கணித ஆசிரியர் அழைத்து செல்வதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நடந்ததை பற்றி பள்ளி தலைமையாசிரியரிடம் கூறினார். இதையடுத்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த கணித ஆசிரியர் ராஜாமணி மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.