தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!!

 
Q

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கள்ளக்குறிச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அங்கிருந்து அவரை தியாகதுருகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் பெற்று, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலுள்ள குடியிருப்பில் நீதிபதி பானுமதி முன்பு அருள் விக்னேஷை ஆஜர்படுத்தினர். அந்த நேரத்தில் அங்கு சென்ற தவெக வழக்கறிஞர்கள் மூன்று பேர், தங்களை உள்ளே செல்ல அனுமதிக்கக் கோரி நீதிமன்ற வாயில் முன்பாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, அருள் விக்னேஷை டிசம்பர் 11ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அருள் விக்னேஷை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், அவரை கள்ளக்குறிச்சியிலிருந்து சாலை மார்க்கமாக கடலூர் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.