ராணிப்பேட்டையில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.. முதலமைச்சர் அடிக்கல்..

ராணிப்பேட்டையில் டாடா நிறுவனம் அமைக்கப்பட உள்ள கார் உற்பத்தி ஆலைக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயத்துள்ளார். அதனை நோக்கிய பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.64 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 26.9 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் சுமார் 417 ஏக்கர் பரப்பளவில் இந்த tata மோட்டார்ஸ் வாகன உற்பத்தி தொழிற்சாலை அந்நிறுவனம் அமைக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முறையாக தனது வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் சிறப்பம்சமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற உயர் ரக கார்களை இந்த ஆலையில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலையில் மொத்தம் உற்பத்தில் 50 சதவிகிதம் இந்த உயரக கார்களுக்கும், மீதம் உள்ள 50 சதவிகித உற்பத்தி டாடா நிறுவனத்தின் மின்சார வாகன கார் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிகள் நாட்டிய பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.