இந்த மாதத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு எடுத்து நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கிள்ளி கொடுக்காமல் அளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு இயந்திரம் டாஸ்மாக் வருமானத்தை நம்பியே இயங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கம் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கும் நிலையில் மற்றொரு பக்கம் மது விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அரசு வகுத்து வருகிறது. அரசு துறையில் பல்வேறு துறைகள் இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி குடிமகன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.