ஏப்ரல் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என 8 நாட்கள் மூடப்படும். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளுமே தேர்தல் சமயங்களில் மூடப்படும்.
இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில், டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட உள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்று DRY DAY ஆக அனுசரித்து அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL, FL2, FL3/FL3A/FL3AA and FL11) ஆகிய அனைத்தும் இயங்காது. அங்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.