திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று திருக்கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர் 4 குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திரு கார்த்திகை தீபம் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.