டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு இனி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பண்டிகை முன்பணம்!

 
Tasmac

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் பணிச்சீரமைப்பு குறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக்  மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Tasmac

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநேர சீரமைப்பு, விடுப்புகள், முன்பணம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் 01.12.2026 முதல் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இனி கடைப் பணியாளர்களுக்கு 8 மணி நேர பணி மட்டுமே இருக்கும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் நிலையில், பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணி செய்வார்கள். முதல் ஷிப்ட் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், மூன்றாவது ஷிப்ட் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் இருக்கும். மேற்பார்வையாளர்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஷிப்ட் நேரத்தில் மட்டுமே பணி செய்ய வேண்டும், 8 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யக் கூடாது. ஒரு ஷிப்டில் குறைந்தது இரண்டு பணியாளர்கள் இருக்க வேண்டும், கடையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை மூன்று ஷிப்ட்களுக்கும் சமமாக பிரித்து பணி அமர்த்த வேண்டும். மேற்பார்வையாளர்கள் மூன்று ஷிப்ட்களையும் மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தாலும், அவர்களுக்கும் 8 மணி நேர பணி மட்டுமே என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். விற்பனை குறைவாக உள்ள நாளை கணக்கில் கொண்டு மாவட்ட மேலாளர் அந்த விடுமுறை நாளை முடிவு செய்து, அந்தந்த கடை மேற்பார்வையாளருக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பை பணியாளர்கள் கை கருவி எனப்படும் Handheld Device மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும், மேற்பார்வையாளர் அதனை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பார். தற்செயல் விடுப்பு எடுக்கும் நாளில் ஒரே கடையில் மற்றொரு பணியாளர் விடுப்பில் இருந்தால், கடை பணி பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாதத்திற்கு 2 மணி நேர அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதையும் கை கருவி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிதி உதவிகளைப் பொறுத்தவரை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு தலா 10,000 ரூபாய் பண்டிகை முன்பணம் வழங்கப்படும். இதற்கும் பணியாளர்கள் கை கருவி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வழங்கப்படும் முன்பணம் 10 மாத தவணைகளில் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மருத்துவ செலவுகளுக்கும் கை கருவி மூலம் விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்கள், பில்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தால், மாவட்ட மேலாளர் மூலம் பரிசீலித்து மருத்துவ செலவு தொகை வழங்கப்படும். மேலும் குழு காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு காப்பீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், விடுப்பு, முன்பணம், மருத்துவ உதவி ஆகிய அனைத்தும் இனி கை கருவி மூலம் மட்டுமே ஆன்லைனில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் கண்காணித்து, 01.12.2026 முதல் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.