தீபாவளி பண்டிகையில் டாஸ்மாக் மது விற்பனை ரூ.441 கோடி..!
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
தீபாவளிக்கு முந்தைய நாளான முதல் நாளில் சுமார் ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி நாளில் சுமார் ரூ.206.63 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்களில் மொத்த விற்பனை ரூ.441.38 கோடியை எட்டியுள்ளது.
மண்டல வாரியாக இரண்டு நாட்களில் நடைபெற்ற மது விற்பனையில், சென்னையில் ரூ. 95.85 கோடி, திருச்சியில் ரூ. 98.97 கோடி, சேலத்தில் ரூ. 87.52 கோடி, மதுரையில் ரூ. 88.38 கோடி, கோவையில் ரூ. 70.66 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ. 98.97 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாட்களிலும் பலர் காலி பாட்டில்களைத் திரும்ப வழங்காமல், பார்சலாக மதுபானங்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செஸ் வரி மூலம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சுமார் ரூ.38 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு மறுநாளான இன்றும் விடுமுறை என்பதால், சுமார் ரூ.192 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விற்பனை நடைபெற்றால், தீபாவளி பண்டிகைக் காலத்தையொட்டிய மொத்த மது விற்பனை சுமார் ரூ.633.38 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

