ஆறாய் ஓடும் டாஸ்மாக்.. அப்படி இருந்து கள்ளச்சாராயம் விற்பனை.. நிர்வாக சீர்கேடு - நாராயணன் திருப்பதி..

 
 பாஜக நாராயணன் திருப்பதி

தமிழகமெங்கும் கள்ளச்சாராய விற்பனையை  இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம்  மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தமிழகமெங்கும் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கும் டாஸ்மாக் சரக்கையும் தாண்டி கள்ளச்சாராயம் விற்பனையாகிக் கொண்டிருப்பது அரசின் நிர்வாக சீர்கேட்டை, மதுவிலக்கு அமலாக்க துறையின் அவலத்தை உணர்த்துகிறது.அந்த பகுதியில்  கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடந்து வருவதாகவும், கைதான அமரன் எனும் நபர் அதிக செல்வாக்கு பெற்றிருந்தாக சொல்லப்படுகிறது.

  டாஸ்மாக்

புற்றீசல்களை போல்  குற்றவாளிகள் பெருகிக்கொண்டிருப்பதற்கு காரணம் லஞ்சம் மற்றும் நிர்வாக சீர்கேடு தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து போவதற்கு காரணம் திறமைக்குறைவோ அல்லது குற்றங்களை தடுக்கும் சட்டங்களோ அல்ல.லஞ்சம் புற்று நோய் போல் சமுதாயத்தில் படர்ந்து விரிந்து விட்ட நிலையில், ஒட்டு மொத்த அமைப்பிலேயே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

கள்ளச்சாராயம்

சர்வ சாதாரணமாக கள்ளச்சாராயம், போதை பொருட்களின் புழக்கம் என கோடிக்கணக்கான மதிப்புள்ள சட்ட விரோத நடவடிக்கைகள் பெருகி வருவது அடுத்த தலைமுறையை நாசமாக்கும். அரசு மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் அலட்சியத்தை விடுத்து தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டால் மட்டுமே சமூக விரோதிகளை ஒடுக்க முடியும். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்   அவர்கள் இரும்புக்கரம் கொண்டு தீய சக்திகளை அடக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.