கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து- பள்ளிகளுக்கு விடுமுறை
கோவையில் 18 டன் எடை கொண்ட பாரத் கேஸ் நிறுவன டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவை அவினாசி மேம்பாலம் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது. கொச்சியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிவந்த நிலையில் டேங்கர் லாரி அதிகாலை விபத்தில் சிக்கியது. கவிழ்ந்து கிடக்கும் டேங்கர் லாரியில் கேஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. டேங்கரில் ஏற்பட்ட கேஸ் கசிவை, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். கிரேன் மூலம் டேங்கர் தூக்கி நிறுத்த முயற்சித்துவருகின்றனர்.
இதனால் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. டேங்கர் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்தில் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.