உத்தராகண்ட் நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்க திட்டம் - கடலூர் ஆட்சியர் தகவல்

 
Uttarakhand - சிக்கித்தவிக்கும் தமிழர்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவால் சிக்கித்தவிக்கும் 30 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தகவல்  தெரிவித்துள்ளார். 
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் கனகராஜ் (64). ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான இவர் வட மாநிலங்களில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு பல்வேறு நபர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலா ஏற்பாட்டாளராக இருந்து வருகிறார்.  அதன்படி கடந்த செப்.3ம் தேதி  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு  சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரை அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்  60 வயதை தாண்டியவர்கள். 
 
சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்ற அவர்கள், பின்னர் டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக தனியார் வாகனம் மூலம் உத்தரகாண்ட் சென்றுள்ளனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் பகுதியை நெருங்குவதற்கு முன்பாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் 3 நாட்கள் அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பாதை சரி செய்யப்பட்ட பிறகு ஆதி கைலாஷ் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 


ஏற்கனவே காலதாமதம் ஆனதால் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை பார்க்காமல் மீண்டும் தாயகம் புறப்பட்டுள்ளனர். இவர்கள் வந்த வாகனம் தாவாகாட் என்ற சிறிய கிராமத்து அருகே வந்தபோது, அவர்கள் கண்ணெதிரிலேயே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு சாலை அடைபட்டது. இதனால் எந்த பக்கமும் செல்ல முடியாமல் இவர்கள் வந்த வாகனம் சிக்கித் தவித்தது.  தாவாகாட் கிராமம்  மின்சார வசதி,  செல்போன் டவர் வசதி போன்றவை அதிகம் இல்லாத ஒரு மலைப் பகுதி என்பதால், செய்வதறியாது தவித்த  கனகராஜ் , தனது நண்படும் சிதம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் என்பவரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விளக்கி உள்ளார்.

இதைத்தொடர்ந்து கணேஷ் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து, அவர்களை மீட்குமாறு உதவி கேட்டுள்ளார்.  பின்னர் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்சொல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். உத்தரகாண்டில் சிக்கியுள்ள பக்தர்களை மீட்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, “உத்தரகாண்டில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மாவட்ட ஆட்சியரை  தொடர்பு கொண்டு கேட்டுள்ளேன். வானிலையை பொறுத்து இன்று (ஞாயிறு) அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.