‘தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’டீம்.. அது வெறும் ஜெராக்ஸ் காபி’ - அமைச்சர் ரகுபதி

 
 ‘தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’டீம்.. அது வெறும் ஜெராக்ஸ் காபி’ -   அமைச்சர் ரகுபதி

தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’டீம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்தார்.  இதனைத்தொடர்து தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாணி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இதில் தன் கட்சியின் குறிக்கோள், கொள்கைகள், செயல்திட்டம், கொள்கைத்தலைவர்கள் யார், அரசியல் எதிரிகள் யார் யார் என்பதையெல்லாம் விஜய் தெரிவித்திருந்தார். 

மதச்சார்பற்ற சமூக திதி என்பது தான் தனது கொள்கை என அறிவித்த விஜய், அண்மைக்காலமாக அரசியல் களத்தில் அதிகம் பேசப்படும் பிளவுவாத அரசியல், நீட் எதிர்ப்பு, திராவிட மாடல், காவி சாயம் பூசுவது, சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும்  பேசிருந்தார்.  திமுக - பாஜக என இரண்டு கட்சிகளையும் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சுமார் 48 நிமிடங்கள் நீடித்த விஜய்இன் உரை, அவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு விருந்தாகவே அமைந்துவிட்டது.   

 ‘தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’டீம்.. அது வெறும் ஜெராக்ஸ் காபி’ -   அமைச்சர் ரகுபதி

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பேச்சுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள்,  அதை தமிழக மக்களிடத்தில் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்றைய தினம் அவர்கள்(தவெக) வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.  அது முற்றிலும் ஜெராக்ஸ் காபி தான்.  எங்களுடைய கொள்கைகளுக்கு  விளக்கங்கள் கொடுத்திருக்கிறாரே தவிர, வேறு எதுவும் இல்லை.  இதுவரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம்,  பி டீம் பார்த்திருக்கிறோம் இது பாஜகவின் சீ டீம். 

ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில் எடுபடும்;  தமிழக மக்களுடைய விருப்புக்கு ஆளாகி இருக்கும் ஒருவரை பற்றி புகழ்ந்து பேசினால் அங்கே எடுபடாது;  தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கும் கொஞ்சம் புகழ் கிடைக்கும் என்பதாலே,  ஆளுநரை பற்றி எதிர்த்து பேசியிருக்கிறாரே தவிர முழுக்க முழுக்க இது பாரதிய ஜனதாவின் சீ டீம்.  விஜய்  சொல்கிறார் நான் எந்த கட்சியினுடைய ஏ டீமோ, பி டீமோ அல்ல என்று,  ஏனென்றால் அவருக்கு தெரியும் அவர் பாஜகவின் சி டீம் என்று. 

Ragupathi

கூட்டணியில் பங்கு என அறிவித்திருக்கிறார் என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ஆட்சிக்கு வரட்டும் அப்போது பார்க்கலாம்.  மக்களை சந்திக்க வேண்டும்.  234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.  வேட்பாளர்களை நியமிக்க வேண்டும்.  மக்களை சந்திக்க வேண்டும்;  பெரும்பான்மை பிடித்து ஆட்சிக்கு வர வேண்டும்.  அதன் பின்னர் தான் இதைப் பற்றி பேச வேண்டும். எங்களுடைய கூட்டணியை நிச்சயமாக யாரும் கெடுத்து விட முடியாது.  தளபதி ஸ்டாலின் அவர்களிடத்தில் காட்டுகிற   பாசத்தை வைத்து யாரும் எங்களை விட்டு போக மாட்டார்கள். 

அண்ணா திமுக கட்சி என்பது இனி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதிமுக தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் விஜயின் குறிக்கோள். பாரதிய ஜனதா வலுவுற்றிருக்கும் வகையிலேயே அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காகவே அவர் அக்கட்சியை பற்றி பேசவில்லை.  ஊழலைப் பற்றி பேசுவது என்றால் 2011 - 2021  வரை மட்டும்தான் பேச வேண்டுமே தவிர,  2021- 26 வரையில் யாரும் எதுவும் பேச முடியாது; எந்த தவறுக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை. 

பழுத்த மரம் அதில் தான் கல்லடி படும்.  அதுபோல அது திராவிட முன்னேற்றக் கழகத்தை தாக்கி பேசினால் தான் மக்கள் மன்றத்திலே ஏதாவது பேச முடியும்.  தமிழ்நாட்டு அரசியலிலேயே பெரியார், அண்ணா, கலைஞர்,  அதேபோல் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். எனவே இதை மீறி யாராலும் அரசியல் செய்ய முடியாது. இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்யவும் முடியாது” என்றார்