அசத்தல் அறிவிப்பு! பெண்கள் 25 கிலோ வரை பொருட்களை பேருந்தில் இலவசமாக கொண்டு செல்லலாம்!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் 25 கிலோ வரை பொருட்களை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களுக்கு புதிய திட்டம் ஒன்றை திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் 25 கிலோ வரை பொருட்களை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், குளிர்சாதன பேருந்து நீங்கலாக அனைத்து நகரப் பேருந்துகள் மற்றும் சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளிலும் சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை 100 கிலோ மீட்டர் வரை கட்டணமில்லாமல் எடுத்து செல்லலாம்.
சுய உதவிக்குழு பெண் பயணிகள் சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு நடத்துநர் வழங்க வேண்டும். பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சுய உதவிக்குழு பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது, சகபயணிகளைப் பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.