அதிமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

 
eps

புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில், வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், மீன் பாடி வண்டிகள், காய்கறி வியாபாரம் செய்யும் வண்டிகள், இட்லி வியாபாரம் செய்யும் பாத்திரங்கள், மீன் வியாபாரம் செய்யும் அன்ன கூடைகள், அயன் பாக்ஸ், அரிசி பைகள் என 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

eps

பின்னர் விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்தவர் அம்மா. பீனிக்ஸ் பறவைபோல எழுந்து வந்து 15 ஆண்டு காலம் ஆட்சியமைத்தார். புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவியும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. சாதாரண கிளை செயலாளர் முதல்வராக முடியும் என்றால் அது அ.தி.மு.க.வில் தான். தி.மு.க.வில் அது நடக்காது. குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  அ.தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி. 2 தலைவர்கள் மறைவுக்கு பின்னர் கட்சியை முடக்க எத்தனையோ அவதாரம் எடுத்தனர். ஆனால், கட்சியை மீட்டு காட்டியிருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் துன்பமும், வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.