பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி நிலைப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்- தமிழக அரசு

 
assembly

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு மீனவர்கள் கடலுக்குள் தங்கள் படகுகள் மூலம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பழவேற்காடு மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசால் அரசாணை (நிலை) எண். 250. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் (மீன் 1) துறை, நாள்: 05.10.2020-ல் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் "திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணியை" மேற்கொள்வதற்கு நிருவாக ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.


இத்திட்டத்திற்கு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி 14.02.2022 அன்று பெறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியில் பக்க எண்.03-ல் குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகள்- i) உள்ளவாறு, தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதி பெறும் பொருட்டு மாநில வனவிலங்கு வாரியத்திற்கு (SBWL) கருத்துரு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை மூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.


மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 26.09.2023 அன்று நடைபெற்ற மாநில வனவிலங்கு வாரியம் கூட்டத்தில் "திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி" மேற்கொள்ள மாநில வனவிலங்கு வாரியத்தால் (SBWL).தேசிய வனவிலங்கு வாரியத்திற்கு (NBWL) அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதி பெறப்பட்டவுடன், "திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி" தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் பணிகள் உடனே துவங்கப்பட்டு விரைந்து முடிக்கப்பட்டு மீனவ மக்களின் உபயோகத்திற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.